சரக்கு போக்குவரத்து சங்க செயலாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை; போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
சரக்கு போக்குவரத்து சங்க செயலாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்து சங்க செயலாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பணி நீக்கம்
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து உரிமையாளர்கள், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
ஈரோட்டில் உள்ள ஒரு லாரி நிறுவனத்தில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேர் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சேலத்தில் அவர்களின் அலுவலகத்தில் பணிபுரியும் வேறு 5 பணியாளர்களை ஈரோட்டிற்கு வரவழைத்து பணிமாற்றம் செய்து சரக்குகள் இறக்கப்பட்டன.
கைது செய்ய வேண்டும்
அப்போது சுற்றுச்சுவர் ஏறி குதித்து அலுவலக கதவுகளை பலவந்தமாக திறந்து 2 சங்கங்களை சேர்ந்த பலர் சரக்கு போக்குவரத்து சங்க செயலாளர் பிங்கலனை நடுரோட்டில் வைத்து கொடூரமாக தாக்கி உள்ளனர்.
சில மணி நேரம் ரத்தம் சொட்ட சிறைபிடிக்கப்பட்டு பின்னர் அவர் வேறு நபரால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஜூலை மாதம் 29-ந்தேதி மூலப்பட்டரை பகுதியில் இதேபோல் கோர்ட்டு உத்தரவுபடி சரக்குகளை இறக்கச்சென்ற சரக்கு உரிமையாளர்களை நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மறித்து தடுத்தனர். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. கொலை வெறி தாக்குதல் நடத்திய சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.