நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறினார்

Update: 2023-02-24 18:45 GMT


நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி கூறினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

மாவைகணேசன்:- மழையால் அதிக அளவில் பாதித்த தரங்கம்பாடி தாலுகாவில் அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை. நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

20 சதவீத ஈரப்பதம்

கோபிகணேசன் (தலைவர், டெல்டா பாசன தகவல் முன்னேற்ற சங்கம்):- கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதம் நிர்ணயிக்கும் உரிமையை மாநில அரசுக்கு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். இந்தமாதம் முதல்வாரத்தில் மழைபெய்தபோது நெல் ஈரப்பதம் உயர்த்த ஆய்வுக்குழுவினர் வந்தனர்.

ஆனால் அறுவடையே முடிவடையும் நிலையில் 20 சதவீத ஈரப்பதம் வரை கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிப்பதுபயன்அளிக்காது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உளுந்து, பயிறு விதை வழங்குவதை 100 சதவீத மானியத்தில் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்.

கூட்டுறவு சர்க்கரை ஆலை

முன்னாள் எம்.எல்.ஏ., கல்யாணம்:- தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர்.கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துவருகிறது. அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து சென்றுவிட்டனர். ஆலை அரவைக்கு தேவையான கரும்பை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமமூர்த்தி:- தரங்கம்பாடி தாலுகா கடலை, பருத்தி போன்ற பண பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்காக செம்பனார்கோவில் வரவேண்டியுள்ளது. இது மிகவும் சிரமமாக இருப்பதால் திருக்கடையூரை மையமாககொண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு

அன்பழகன் (பொதுச்செயலாளர், டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்) :- மழையினால் மாவட்டத்தில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்

கலெக்டர் மகாபாரதி:- விவசாயிகளின் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். அடுத்த கூட்டத்தில் அதிகாரிகள் கலந்துகொள்ளவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கை

இது தொடர்பாக ஆய்வு செய்து முறைகேடு நடைபெறுவது உறுதிசெய்யப்பட்டால் நிச்சயம் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண் இணை இயக்குனர் சேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்