கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-11 16:43 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆபரேஷன் கந்து வட்டி

தமிழகத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக போலீஸ் டி.ஜி.பி.யால் "ஆப்ரேசன் கந்து வட்டி" கடந்த 7-ந் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, கடந்த 10-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும், போலீஸ் நிலையங்களிலும் கந்து வட்டி சம்பந்தமான மனு பெறும் முகாம் நடந்தது.

இதன் காரணமாக மகராஜகடை போலீஸ் நிலைய எல்லையில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பூசாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனி என்பவர், உரிய ஆவணங்களுடன் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் பெரியபனமுட்லு கிராமத்தை சேர்ந்த கோவிந்தசிங் என்பவரின் மீது மகராஜகடை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புகார் அளிக்கலாம்

மேலும், கோவிந்தசிங் வீட்டை சோதனை செய்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஒப்பந்த பத்திரம் மற்றும் அதன் நகலை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எவரேனும் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு இருந்தால், உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களிலோ அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலோ புகார் அளித்தால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்