சாலையின் குறுக்கேதள்ளுவண்டியை நிறுத்தி வியாபாரி போராட்டம்

பெரியகுளத்தில் சாலையின் குறுக்கே தள்ளுவண்டியை நிறுத்தி வியாபாரி போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2023-08-18 18:45 GMT

பெரியகுளம் தென்கரையில் கடைவீதி உள்ளது. இங்கு சாலையின் இரு புறமும் தள்ளுவண்டி, நடைபாதைகளில் கடைகள் அமைத்து சிலர் வியாபாரம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வீதியில் உள்ள கவுமாரியம்மன் கோவில் அருகே தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்ய பெண் ஒருவர் வந்தார். அப்போது தள்ளுவண்டியை நிறுத்த வியாபாரிகள் இடம் தர மறுத்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர் சாலையின் குறுக்கே தள்ளு வண்டியை நிறுத்தி போராட்டம் நடத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தள்ளுவண்டியை அப்புறப்படுத்தினர். இதனால் கடைவீதி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்