600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை: மாணவி நந்தினியை நேரில் அழைத்து வாழ்த்திய முதல்-அமைச்சர்
பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவியிடம் உயர்கல்விக்கான உதவிகளை வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.
சென்னை,
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில் திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து வரலாற்று சாதனை படைத்திருந்தார். அவருக்கு அனைத்து தரப்பிலும் வாழ்த்து குவிந்து வருகிறது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி நந்தினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரை நேரில் அழைத்து இருந்தார். இதற்காக மாணவி நந்தினி, அவருடைய பெற்றோர் சரவணக்குமார்-பானுப்பிரியா மற்றும் சகோதரர் பிரவின்குமார் ஆகியோருடன் சென்னை வந்தார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முகாம் அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட மாணவி நந்தினி மற்றும் அவருடைய குடும்பத்தினர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது மாணவி நந்தினிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததோடு, சிறப்பு பரிசும் வழங்கி கவுரவித்தார்.
உயர்கல்விக்கான உதவி
அப்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் க.நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 'பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனையை மாணவி நந்தினி படைத்துள்ளார். மாணவி நந்தினி, அவருடைய குடும்பத்தினர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் சேர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவருடைய முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி உயர்கல்வி படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் பாக்கியம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு வெளியே வந்த மாணவி நந்தினி கூறியதாவது:-
மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது பெற்றோர், ஆசிரியர்களுக்கு என் வெற்றியை சமர்ப்பிக்கிறேன். எனக்கு வாழ்த்து சொல்வதற்காக முதல்-அமைச்சர் என்னை அழைத்து இருந்தார். அவரை வீட்டுக்கு சென்று சந்தித்தது, என் வாழ்க்கையில் மிக பெரும் பாக்கியமாக கருதுகிறேன். யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பரிசு பொருட்கள் அனைத்தையும் வழங்கி, என்னுடைய உயர்கல்விக்கான உதவிகளை வழங்குவதாகவும் சொல்லி இருக்கிறார்.
முதல்-அமைச்சருக்கும், அரசுக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். பி.காம் சி.ஏ. படித்துவிட்டு ஆடிட்டிங் பண்ணுவது தான் என்னுடைய விருப்பம். உழைப்பு இருந்தால் உயர்வு இருக்கும். அந்த உழைப்பு மட்டுமல்லாது, பெற்றோர் கொடுத்த ஆதரவு, ஆசிரியர் கொடுத்த ஊக்கம் ஆகியவைதான் இந்த அளவுக்கு என்னை கொண்டு வந்துள்ளது. என் மேல் ஆசிரியர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
'டுவிட்டர்' பதிவு
மாணவி நந்தினியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதுதொடர்பாக தன்னுடைய 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-
'கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து' என்று பல நிகழ்ச்சிகளிலும் நான் கூறிவருகிறேன். தற்போது வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ள மாணவி நந்தினியும், "படிப்புதான் சொத்து என்று நினைத்து படித்தேன்" என பேட்டியில் கூறியதை கண்டு பெருமையடைந்தேன்.
அவரை நேரிலும் அழைத்து வாழ்த்தினேன். அவரது உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நமது அரசே செய்துதரும் என்ற உறுதியையும் வழங்கியுள்ளேன். எளிய குடும்ப பின்னணி கொண்ட நந்தினி போன்றோர் தங்கள் உழைப்பால் அடையும் உயரங்கள்தான் நம் தமிழ்நாட்டின் அடையாளம். "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண்''.
இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.