பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மூங்கில் கடை பகுதியில் சென்றபோது, திடீரென ஸ்கூட்டர் முன்னால் சென்ற மொபட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். அந்த வழியாக சென்றவர்கள் இந்த விபத்து குறித்து வெப்படை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். ஆனால் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. பின்னர் அவருடைய உடல் மீட்கப்பட்டு பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.