தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் கோவில் பூசாரி பலி

திருப்பூர் குமரன் ரோட்டில் தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் கோவில் பூசாரி பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். லாரி மோதியதில் 4 கார்கள், 6 இருசக்கர வாகனங்கள் சேதமானது.

Update: 2023-04-28 17:15 GMT


திருப்பூர் குமரன் ரோட்டில் தாறுமாறாக ஓடிய லாரி மோதியதில் கோவில் பூசாரி பலியானார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். லாரி மோதியதில் 4 கார்கள், 6 இருசக்கர வாகனங்கள் சேதமானது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தறிகெட்டு ஓடிய லாரி

திருப்பூரில் குமரன் ரோடு எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையாக உள்ளது. இந்த சாலையில் முக்கிய வங்கிகள், தாசில்தார் அலுவலகம், வடக்கு போலீஸ் நிலையம், ஆர்.டி.ஓ. அலுவலகம், மாவட்ட சிறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பெரிய நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளன. இதனால் ரோட்டோரம் வாகனங்கள் அதிகம் நிறுத்தப்பட்டு காணப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் விறகு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை மதுரை மேலூரை சேர்ந்த முருகன் (வயது 47) என்பவர் ஓட்டி வந்தார். டவுன்ஹால் அருகே வந்தபோது லாரி பிரேக் பிடிக்காமல் போனதாக தெரிகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தறிகெட்டு ஓடியது. பிரேக் பிடிக்கவில்லை என்று கத்தியபடி முருகன் லாரியை ஓட்டி வந்துள்ளார். கோர்ட்டு ரோடு சந்திப்பு அருகே வந்தபோது முன்னால் சென்ற சரக்கு வேன், அடுத்ததாக கார் ஆகியவற்றின் மீது லாரி மோதியது.

ரோட்டில் சிதறி கிடந்த வாகனங்கள்

அத்துடன் லாரி நிற்காமல் தொடர்ந்து அங்குமிங்கும் முன்னேறி சென்று கொண்டிருந்தது. ரோட்டில் லாரி தாறுமாறாக ஓடியதை பார்த்து வாகன ஓட்டிகள் அலறியடித்தப்படி ஒதுங்கினார்கள். ரோட்டோரம் இருந்த மின்மாற்றியில் லாரி மோதியதில் டமார் என்ற சத்தத்துடன் மின்மாற்றி வெடித்தது. இதைப்பார்த்து அருகில் உள்ள ஜவுளிக்கடைக்கு வந்த பெண்கள் ஓட்டம் பிடித்தனர்.

அதன்பிறகும் லாரி நிற்காமல் ரோட்டில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இருசக்கர வாகனத்தில் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் சிறிது தூரம் சென்று லாரி நின்றது.

குமரன் ரோட்டில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே நொறுங்கியும் சிதறியும் கிடந்தன. வாகன ஓட்டிகள் பதற்றத்துடன் காணப்பட்டனர். இதன்காரணமாக குமரன் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். லாரி டிரைவர் முருகனை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். சிவகாசியில் இருந்து விறகு லோடு ஏற்றிக்கொண்டு திருப்பூர் வீரபாண்டிக்கு வந்துவிட்டு, பின்னர் இங்கிருந்து தாராபுரம் நோக்கி சென்றபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

கோவில் பூசாரி பலி

விபத்தில் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பெண் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிரேக் பிடிக்காததால் இந்த விபத்து நடந்தது தெரியவந்தது. இந்த விபத்தில் 4 கார்கள், 6 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

விபத்தில் இறந்தவர் காங்கயம் பாப்பினியை சேர்ந்த கண்ணன் (46) என்பதும், இவர் பாப்பினியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாகவும், வீட்டில் வைத்துபனியன் பிரிண்டிங் பட்டறை தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.

பலியான கண்ணனுக்கு கார்த்திகா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் தேனியை சேர்ந்த ஆண்டிசாமி (35), சேகர் (24), மணி (45), திருப்பூர் அணைப்பாளையத்தை சேர்ந்த மயிலா (52) என்பது தெரிய வந்தது. அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்