தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி அர்ச்சகர் சாவு

பரமக்குடியில் தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி அர்ச்சகர் இறந்தார். மகன் இறந்த அதிர்ச்சியில் அவரது தந்தையும் பரிதாபமாக உயிரிழந்தார்்.

Update: 2023-04-05 18:45 GMT

பரமக்குடி, 

பரமக்குடியில் தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி அர்ச்சகர் இறந்தார். மகன் இறந்த அதிர்ச்சியில் அவரது தந்தையும் பரிதாபமாக உயிரிழந்தார்்.

கோவில் அர்ச்சகர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மஞ்சள்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 65). இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு கார்த்திக் ராஜா (35) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். முருகேசன் கோர்ட்டில் வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்று அதில் வந்த பணத்தில் 2 மகள்களையும் மதுரையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். கார்த்திக் ராஜாவுக்கும், பரமக்குடி ஜீவா நகரை சேர்ந்த நாகஜோதி என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

கார்த்திக் ராஜா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் அர்ச்சகராக வேலை பார்த்து வந்தார். முருகேசனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தந்தை-மகன் சாவு

நேற்று முன்தினம் இரவு கார்த்திக் ராஜா தனது தந்தையை ஆஸ்பத்திரியில் பார்த்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பரமக்குடி ஓட்டப்பால பகுதியில் வந்தபோது புதிதாக கட்டப்பட்டு வரும் ரவுண்டானாவின் தடுப்புச்சுவர் மீது கார்த்திக் ராஜா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பரமக்குடி போலீசார் அங்கு சென்று கார்த்திக் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிைடயே தனது மகன் விபத்தில் இறந்த செய்தியை கேட்டதும் திடீரென ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முருகேசனும் உயிரிழந்தார். தந்தை, மகன் இருவரது உடல்களும் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தந்தை, மகன் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்