ஓமலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பலி
ஓமலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் பலியானார்.
ஓமலூர்:
ஓமலூர் அருகே உள்ள சிந்தாமணியூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 61). இவருடைய மனைவி சாந்தி (56). இவர்களது மகன் சேகர் (35). இந்தநிலையில் கிருஷ்ணராஜின் உறவினர் இல்ல திருமண விழா ஓமலூர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொள்ள சாந்தி, சேகர் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அப்போது ஓமலூர் பெரமச்சூர் மேம்பாலம் அருகில் உள்ள வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது, பின்னால் அமர்ந்திருந்த சாந்தி நிலைதடுமாறி ரோட்டில் தலைக்குப்புற விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சாந்தி சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.