மொபட் மீது தண்ணீர் லாரி மோதியதில் தலைநசுங்கி பெண் பலி

திருமுருகன்பூண்டி அருகே மொபட் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அந்தப் பெண் அணிந்திருந்த நகையை யாரோ திருடிவிட்டதாக அவரது கணவர் புகார் கூறியுள்ளார்.

Update: 2022-06-09 17:31 GMT
  • அனுப்பர்பாளையம்

திருமுருகன்பூண்டி அருகே மொபட் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அந்தப் பெண் அணிந்திருந்த நகையை யாரோ திருடிவிட்டதாக அவரது கணவர் புகார் கூறியுள்ளார்.

லாரி-மொபட் மோதல்

திருப்பூர் ஆத்துப்பாளையத்தை அடுத்த எஸ்.பி.கே. நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 41). இவருடைய மனைவி சண்முகப்பிரியா (33). இவர்களுக்கு 12 மற்றும் 10 வயதில் 2 மகன்கள் உள்ளனர். தியாகராஜன் ஊத்துக்குளி ரோட்டில் டயர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சண்முகப்பிரியா காய்கறி வாங்குவதற்காக மொபட்டில் திருமுருகன்பூண்டிக்கு சென்றார்.

அங்கு காய்கறிகளை வாங்கிவிட்டு, பூண்டி ரிங் ரோடு வழியாக வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். திருமுருகநாதசுவாமி கோவிலை அடுத்த வளைவு அருகே சென்றபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவரது மொபட்டின் மீது லேசாக உரசியது.

இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த சண்முகப்பிரியா மீது லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

நகைகள் மாயம்

இது குறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சண்முகப்பிரியாவின் உடலை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரியை ஓட்டி வந்த பார்த்தீபன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்து சண்முகப்பிரியாவின் உடல் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது சண்முகப்பிரியா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தாலிச்சங்கிலி மற்றும் 1½ பவுன் சங்கிலி காணாமல் போனதாக புகார் தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் விசாரணை

இதுதொடர்பாக போலீசார் விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் மற்றும் ஆம்புலன்சில் உடலை ஆஸ்பத்திரிக்கு ஏற்றி சென்றவர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்