பஸ்சில் ஏறிய போது இளம்பெண்ணிடம் 11 பவுன் நகை அபேஸ்

நாகர்கோவிலில் பஸ்சில் ஏறிய போது இளம்பெண்ணிடம் 11 பவுன் நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-04-27 21:10 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் பஸ்சில் ஏறிய போது இளம்பெண்ணிடம் 11 பவுன் நகையை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இளம்பெண்

குமரி மாவட்டத்தில் பஸ்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளை குறிவைத்து நகை பறிப்பு மற்றும் பணம் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் நாகர்கோவிலில் பஸ்சில் ஏறிய போது ஒரு பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அகஸ்தீஸ்வரம் அருகே நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் வேல் செல்வன். இவருடைய மனைவி கார்த்திகா (வயது 30). இவர்களுடைய குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து குழந்தையை அழைத்துக் கொண்டு நேற்று நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளித்து விட்டு வீடு திரும்புவதற்காக அண்ணா பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அகஸ்தீஸ்வரம் செல்லும் பஸ்சில் கூட்ட நெரிசலுடன் ஏறி இருக்கையில் அமர்ந்தார். பஸ்சிற்குள்ளேயும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நகை பறிப்பு

இந்தநிலையில் இருக்கையில் அமர்ந்திருந்த கார்த்திகா கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை காணவில்லை. பஸ்சில் ஏறும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகையை மர்மநபர் பறித்திருக்கலாம் என தெரியவந்தது.

அதே சமயத்தில் நகையை பறிகொடுத்த கார்த்திகா கதறி அழுதார். உடனே அங்கிருந்தவர்கள் கார்த்திகாவை சமாதானம் செய்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அண்ணா பஸ் நிலையம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். பஸ்சில் ஏறிய போது இளம்பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்