வாலிபரிடம் நூதன முறையில் பணம் அபேஸ்; போலி சாமியார் உள்பட 5 பேர் கைது

வடலூரில் வாலிபரிடம் நூதன முறையில் பணம் அபேஸ் செய்த போலி சாமியார் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-23 17:12 GMT

வடலூர், 

வடலூர் கலைஞர் நகர் முத்துகன்னி தெருவை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஜோதிமணி (வயது 30). இவர் வீட்டில் இருந்த போது, ஒரு காரில் 5 பேர் வந்தனர். அதில் ஒருவர் சாமியார் போல் வேடம் அணிந்து வந்திருந்தார்.

தொடர்ந்து அவர்கள் ஜோதிமணியின் வீட்டிற்குள் சென்று தாங்கள் சிவனடியார்கள் என்றும், திருவண்ணாமலையில் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர். அப்போது சாமியார் வேடம் அணிந்திருந்தவர், உங்கள் வீட்டிற்கு சிவன் நேரடியாக அருள் கொடுக்க எங்களை அனுப்பி உள்ளார் என்றும், அதற்கு கைமாறாக திருவண்ணாமலையில் உள்ள சிவன் கோவிலில் அன்னதானம் செய்ய வேண்டும் என்றும் அதற்கு ரூ.45 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ரூ.3 ஆயிரம்

பணம் கொடுக்கவில்லை என்றால் சாமி குத்தம் ஆகிவிடுமோ என்று அஞ்சிய ஜோதிமணி குடும்பத்தினர், தற்போது எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினர். அதற்கு அவர்கள் எவ்வளவு பணம் உள்ளதோ அதை மட்டும் தாருங்கள் மீதி பணத்தை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அதனை மதியம் வந்து பெற்றுச்செல்கிறோம் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து ஜோதிமணி தன்னிடம் இருந்த ரூ.3 ஆயிரத்தை மட்டும் அவர்களிடம் கொடுத்துள்ளார். இதைபெற்றுக்கொண்ட அவர்கள் மீதி பணத்தை சிறிது நேரம் கழித்து வந்து பெற்றுக்கொள்கிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.

சிறிது நேரத்தில் ஜோதிமணியின் மகன் மகேஷ்வரன்(8), வீட்டுக்கு வந்தான். அப்போது அவன், நான் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த போது நமது குடும்பத்தை பற்றி காரில் வந்தவர்கள் விசாரித்ததாக கூறினான். இதனால் சந்தேகம் அடைந்த ஜோதிமணி, இதுகுறித்து வடலூர் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசில் சிக்கினர்

இதையடுத்து ஜோதிமணி கூறிய அடையாளங்களை வைத்து வடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார், அந்த கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வடலூர் ராகவேந்திராசிட்டி செல்லும் வழியில் உள்ள ஒரு டீக்கடை அருகில் சாமியாருடன் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவலை அளித்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் போலூர் வட்டம் குருவிமலையை சேர்ந்த போலி சாமியார் சேகர் (65), போலூர் வட்டத்தை சேர்ந்த கணேசன் மகன் டிரைவர் ரகுநாத்(26), வெண்மணி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன்(69), கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் திருப்பாலப்பந்தலை சேர்ந்த தண்டபாணி மகன் முருகன்(43), திருக்கோவிலூர் துறிஞ்சிப்பட்டை சேர்ந்த சேகர் மகன் ஜெகதீஷ்(23) என்பதும், சாமியார் போல் வேடமணிந்து நூதனமுறையில் ஜோதிமணியிடம் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சேகர் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்