மனம் திருந்தி வாழும் கர்நாடக பெண் மாவோயிஸ்டுக்கு ஆவின் பாலகம்

மனம் திருந்தி வாழும் கர்நாடக பெண் மாவோயிஸ்டுக்கு ஆவின் பாலகம் அமைத்து கொடுக்கப்பட்டது. அதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்தார்.

Update: 2022-11-19 18:40 GMT

மனம் திருந்தி வாழும் கர்நாடக பெண் மாவோயிஸ்டுக்கு ஆவின் பாலகம் அமைத்து கொடுக்கப்பட்டது. அதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திறந்து வைத்தார்.

பெண் மாவோயிஸ்டு

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி பிரபா என்ற சந்தியா (வயது 45). அரசால் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினராக கர்நாடக மாநிலம், மேற்கு தொடர்ச்சிமலை சிறப்பு மண்டல குழுவிற்கு உட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

பிரபா மீது சிமோகா மற்றும் உடுப்பி மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் 44 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடக அரசு பிரபாவின் தலைக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அறிவித்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

மாவோயிஸ்டு இயக்கத்தின் மத்தியக்குழு உறுப்பினரான இவருடைய கணவர் கிருஷ்ணமூர்த்தி கடந்தாண்டு கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார். கணவர் கைது, உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் மனம் திருந்திய பிரபா கடந்தாண்டு டிசம்பர் மாதம் 18-ந் தேதி திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலையில் சரண் அடைந்தார். பின்னர் அவர் வேலூர் அரியூரில் உள்ள இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார். பிரபா தனது வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தார்.

ஆவின் பாலகம்

அதன்பேரில் வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு, அரியூர் முறுக்கேரி பகுதியில் ஆவின் பாலகம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கியூபிரிவு போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள், போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ்கண்ணன், தீபாசத்யன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார்.

மனம் திருந்தி வர...

பின்னர் அவர் கூறுகையில், சமூகத்திற்கு எதிரான குற்றசெயல்களில் செயல்படும் அனைவரும் மனம் திருந்தி வர வேண்டும். சாராயம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு மனம் திருந்தி வருபவர்களின் வாழ்வாதாரம் மேம்பட அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. அதேபோன்று மாவோயிஸ்டு, நக்சலைட்டுகளாக இருந்து திருந்தியவர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு ஆதரவு தருகிறது என்றார்.

இதில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், ஆவின் பொதுமேலாளர் ரவிகுமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்