வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த மாணவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே போல் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவர் 10-ம் வகுப்பு படித்துவருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது.
6-ம் வகுப்பு மாணவரின் ஆதாரை பதிவிறக்கம் செய்ய அவரது தந்தை முயன்ற போது அதற்கான ஓ.டி.பி. வெகு நேரமாகியும் வரவில்லை. அந்த ஓ.டி.பி. 10-ம் வகுப்பு மாணவரின் தந்தை செல்ேபான் எண்ணுக்கு சென்றுள்ளது. இப்படி இருவரின் தந்தையும் ஒரே ஆதார் எண்ணை வைத்து தங்கள் மகனுக்கு மாறி மாறி தங்கள் விவரங்களை அப்டேட் செய்து வந்துள்ளனர்.
ஒவ்வொரு அப்டேட்டுக்கு பிறகும் ஆதார் ஆணையத்திலிருந்து ஆதார் அட்டையானது அவர்கள் வீட்டிற்கு தபால் வழியே சென்றுள்ளது.
இதில் ஏதோ குளறுபடி உள்ளது என்பதை அறிந்த மாணவரின் தந்தை ஏற்கனவே ஆதாரில் பதிவு செய்யப்பட்டிருந்த அலைபேசி எண்ணை எடுத்து அழைத்து பேசினார். அப்போதுதான் மற்றொர மாணவருக்கும் அதே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக காங்கேயம் தாலுகாஅலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையத்தினை அணுகிய பொழுது மதுரைக்குச் செல்ல வேண்டும் அல்லது கலெக்டர் அலுவலகம் சென்று பாருங்கள் என்று தங்களை அலைக்கழிப்பதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்