ஆடித்தபசு திருவிழா ஆலோசனை கூட்டம்; ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

Update: 2023-07-05 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா வருகிற 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் 31-ந் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறையினர் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி சரவணன், ஆணையாளர் சபாநாயகம், கோவில் துணை ஆணையர் ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், "ஆடித்தபசு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இதில் தடையில்லா மின்சாரம், தடையில்லா குடிநீர், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஆகியன முக்கிய அம்சமாகும். எனவே மின்வாரிய அதிகாரிகள், காவல்துறையினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர் அனைவரும் நகராட்சியுடன் இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கு, பக்தர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பக்தர்கள் ஆடித்தபசுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், தீயணைப்பு வாகனங்கள் அவசர கால ஊர்திகள் தயார் நிலையில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் நகராட்சி துணை தலைவர் கண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி, மருத்துவ அலுவலர் டாக்டர் மகாலட்சுமி, நெடுஞ்சாலை துறை திருமலைச்சாமி, பலவேசம், மின்வாரிய உதவி பொறியாளர்கள் கணேச ராமகிருஷ்ணன், தங்கமாரிமுத்து, தீயணைப்பு துறை சார்பில் சரவணன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர், நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்