பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா

திருவரங்குளம் பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-07-13 18:31 GMT

அரங்குளநாதர் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் சமேத அரங்குளநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெரியநாயகி அம்மனை எழுந்தருள செய்தனர். இதையடுத்து அம்பாளுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கொடிேயற்றம்

தொடர்ந்து அம்பாள் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் கொடி மரத்தில் காமதேனு படம் பொறித்த வெண்கொடியை சிவாச்சாரியார்கள் மேள தாளம், மந்திரம் முழங்க, பக்தர்கள் சிவ, சிவ... ஹர, ஹர... கோஷத்துடன் கொடியேற்றப்பட்டு தீபாரானை காண்பிக்கப்பட்டது.

இதில் கோவில் மேற்பார்வையாளர் மற்றும் மண்டகப்படிதாரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள், கோவில் பணியாளர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்