பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபர் கைது
புளியங்குடியில் பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் நேற்று மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று சாந்தி கழுத்தில் கிடந்த சங்கிலியை அறுக்க முயன்றார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட சாந்தி சத்தம் போடவும் அந்த வாலிபர் வேகமாக அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் சிலர் அந்த வாலிபரை விரட்டி பிடித்தனர். பின்னர் கயிற்றால் கைகளை கட்டி வாலிபரை போலீசிடம் ஒப்படைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் சிவகிரியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு எனத் தெரிய வந்தது. பின்னர் சாந்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் மணிகண்ட பிரபுவை கைது செய்தனர்.