சென்னையில் பெண்களிடம் தாலி சங்கிலியை பறித்த வாலிபர் அதிரடி கைது
சென்னையில் பெண்களிடம் தாலி சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.;
சென்னை அடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம், செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. குறிப்பாக பெண்கள் அணிந்திருந்த தாலி சங்கிலிகளை மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள் பறித்துச்சென்றனர். கடந்த மாதம் 24-ந்தேதி அன்று அடையாறு காந்திநகர் பகுதியில் மஞ்சுளா என்ற மூதாட்டி கோவிலுக்கு போய்விட்டு, தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்து தாக்கி, அவர் அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்று விட்டனர்.
பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை பறித்து பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் இருவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விஜய் (வயது 22) என்ற வாலிபரை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 4 சங்கிலி பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்தது. அவரது கூட்டாளி யுவராஜ் (28) என்பவரை தேடி வந்தனர். நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அவரும் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து சுமார் 10 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.