கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் திடீா் போராட்டம்

போலி ஆவணங்கள் தயாரித்து தனக்கு சொந்தமான நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சித்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2023-05-08 18:45 GMT

நாகர்கோவில்:

போலி ஆவணங்கள் தயாரித்து தனக்கு சொந்தமான நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சித்து கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இளம்பெண் போராட்டம்

தக்கலை பாண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் இன்பராஜ். இவருடைய மகள் அபினஜா (வயது 26). இவர் நேற்று தனது உறவினர் ஒருவருடன் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.

தனக்கு சொந்தமான நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயற்சிப்பதாகவும், இதனால் அவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும், எனவே உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கதறி அழுதார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அபினஜாவை சமாதானம் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது இளம்பெண் போலீசாரிடம் கூறியதாவது:-

எனது தாயார் சுஜா புற்றுநோயால் கடந்த 2010-ம் ஆண்டு இறந்து விட்டார். எனது தந்தை போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கும் திருமணமாகி கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை எனது தந்தை வீட்டிற்கே அழைத்து வந்தார்.

சொத்துகள் அபகரிப்பு

இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டு எனது தந்தை வீட்டில் இறந்து கிடந்தார். பின்னர் எனது தாத்தாவுக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்துடன் கூடிய வீட்டை போலி ஆவணம் தயாரித்து 3 சென்ட் நிலத்தை எனது தந்தையின் போலி கையெழுத்திட்டு அந்த பெண் சொந்தமாக்கி கொண்டார்.

தற்போது மீதமுள்ள 3 சென்ட் வீடுடன் கூடிய நிலத்தையும் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயற்சி மேற்கொள்கிறார். அந்த பெண்ணுடன் சேர்ந்து ஒரு போலீசார் மற்றும் அவரது உறவினர்களும் எனக்கு தினமும் கொலை மிரட்டலும், பாலியல் ரீதியாக தொந்தரவும் அளித்து வருகின்றனர். இதனால் என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தக்கலை போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே எனக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன்.

எனக்கு சேர வேண்டிய சொத்துகளை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

இதையடுத்து அபினஜாவிடம், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் போராட்டத்தை கைவிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

பாதுகாப்பு கேட்டு இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்