வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலி
வேடசந்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் பலியானார்.
வேடசந்தூர் அருகே மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்த சின்னத்துரை மகன் சிவப்பிரகாஷ் (வயது 22). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துவிட்டு, தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் இன்று காலை சிவப்பிரகாஷ் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். பின்னர் தண்ணீர் பாய்ச்சி முடித்துவிட்டு மின் மோட்டாரின் சுவிட்சை அமர்த்துவதற்காக கிணற்றின் பக்கவாட்டு பகுதிக்கு சென்றார். அப்போது கால் இடறி கிணற்றுக்குள் சிவப்பிரகாஷ் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாத நிலையில் அவர் கிணற்று தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
இதற்கிடையே தோட்டத்திற்கு சென்ற மகன் வெகுநேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த சின்னத்துரை, தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு கிணத்துமேட்டின் அருகே சிவப்பிரகாசின் உடைகள், செல்போன் மட்டும் இருந்தது. பின்னர் தோட்டம் முழுவதும் சிவப்பிரகாசை தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. உடனே இதுகுறித்து சின்னத்துரை வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் சிவப்பிரகாசை தேடி பார்த்தனர். அப்போது கிணற்றுக்குள் சேற்றில் சிக்கியிருந்த சிவப்பிரகாசின் உடலை மீட்டனர்.
இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.