கார் மோதி இளம்பெண்-சிறுமி பலி
வள்ளியூர் 4 வழிச்சாலையில் மொபட்டில் சென்றபோது கார் மோதியதில் இளம்பெண்ணும், சிறுமியும் இறந்தனர்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் 4 வழிச்சாலையில் மொபட்டில் சென்றபோது கார் மோதியதில் இளம்பெண்ணும், சிறுமியும் இறந்தனர்.
மொபட்டில் சென்றனர்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு. இவருடைய மனைவி கார்த்திகா (வயது 20).
நேற்று மதியம் கார்த்திகாவும், சின்னராசின் அண்ணன் மகள் சாய் தன்யாவும் (6) மொபட்டில் வள்ளியூரில் இருந்து கேசவனேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
வள்ளியூர் 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது நாகர்கோவிலில் இருந்து கோவை நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரை அமீர் (23) என்பவர் ஓட்டி வந்தார்.
கார் மோதியது
அந்த கார், எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கார்த்திகா உயிரிழந்தார்.
சிறுமி தன்யா பலத்த காயம் அடைந்தாள். அவளை வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து வள்ளியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.