வீடு புகுந்து கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரக்கொலை

மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்த வாலிபர், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

Update: 2022-07-08 19:04 GMT

மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்த வாலிபர், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதலை கைவிட்ட இளம்பெண்

மதுரை பைபாஸ் ரோடு பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி, பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருடைய மூத்த மகள் அபர்ணா (வயது 19). பள்ளிப்படிப்பை முடித்த அவர் மேற்கொண்டு படிக்கவில்லை.

மதுரை விராட்டிபத்தை சேர்ந்தவர் ஹரிகரன் (23), கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அபர்ணாவை காதலித்து வந்துள்ளார். அபர்ணா அவரை காதலித்ததாகவும், பின்னர் காதலை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஹரிகரன் அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் பாண்டி தனது மகளை அவருக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. அதை தொடர்ந்து ஹரிகரன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுபற்றி வீட்டில் உள்ளவர்களிடம் அபர்ணா கூறி இருக்கிறார்.

வீடு புகுந்து ெகாடூரக்கொலை

எனவே பாண்டி தனது மகளை வேறு ஒருவருக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தார். அதன்படி முனீஸ்வரன் என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து, அவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதை அறிந்த ஹரிகரன் ஆத்திரம் அடைந்தார்.

நான் காதலித்த பெண்ணை வேறு ஒருவர் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று நினைத்து, நேற்று மதியம் அபர்ணா வீட்டிற்கு சென்றார். அந்த நேரத்தில் அவரது பெற்றோர் கடைக்கு சென்று இருந்ததால் அவர் மட்டும் தனியாக இருந்தார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அபர்ணாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி தகராறு செய்தார். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தும், குத்தியும் கொடூரமாக கொலை செய்துவிட்டு வெளியே வந்தார்.

மோட்டார் சைக்கிளில் தப்பினார்

அப்போது வீட்டிற்கு அபர்ணாவின் தாயாரும், சித்தப்பாவும் வந்துள்ளனர். அவர்கள் ஹரிகரன் தங்கள் வீட்டில் இருந்து ஓடியதை பார்த்து அவரை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அவர்களை தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார். ஹரிகரன் கொண்டு வந்த பை மட்டும் அவர்களிடம் சிக்கியது. அதில் கத்தி, சுத்தியல், கையுறை போன்றவை இருப்பதை பார்த்தனர்.

உடனே அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு அபர்ணா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அபர்ணாவின் உடலை பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.. அதில் நேற்று முன்தினம் ஹரிகரன் அவர்கள் வீட்டிற்கு வந்து தனக்கு அபர்ணாவை திருமணம் முடித்து வைக்கும்படி கூறி தகராறு செய்துள்ளார். ஆனால் அவர்கள் அவரை சத்தம் போட்டு அனுப்பி வைத்துள்ளனர். அப்போதே போலீசாரிடம் இந்த தகவலை தெரிவித்து இருந்தால் இந்த கொலை நடந்திருக்காது என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் தப்பிய ஹரிகரனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்