ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை
கோவில்பட்டியில் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் தற்கொலை
குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலையில் தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூரை கடந்து கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணாநகர் ரெயில்வே சுரங்க வழிப்பாதை அருகே வந்தபோது, தண்டவாளத்தில் நடந்து சென்ற இளம்பெண் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்தார். இதில் அவர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில் என்ஜின் ஓட்டுனர் மகேந்திரன் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் அதிகாரியிடம் புகார் தெரிவித்து விட்டு ரெயிலை இயக்கி சென்றார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்த பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் சுடிதார் அணிந்து இருந்தார். அவர் யார்? எதற்காக தற்கொலை செய்தார்? என்பன போன்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
அவரது உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் யார்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.