அரசு வேலை கேட்டு மாற்றுத்திறனாளி மனைவியை சுமந்தபடி வந்த கூலித்தொழிலாளி
அரசு வேலை கேட்டு மாற்றுத்திறனாளி மனைவியை சுமந்தபடி வந்த கூலித்தொழிலாளி மனு அளிக்க வந்தாா்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா ஆ.கூடலூரை சேர்ந்தவர் முனியன் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர் தனது 2 குழந்தைகளுடனும் கால்கள் நடக்க இயலாத தனது மாற்றுத்திறனாளி மனைவி ஜோதியை (32) சுமந்து வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்து வருகிறேன். எனது மனைவி ஜோதி ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்துள்ளார். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால் தமிழக அரசு, கருணை அடிப்படையில் எனது மனைவிக்கு வேலை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதுபோல் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் மோகன், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.