ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பர்ஸ் திருட்டு

இரணியல் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பர்சை திருடிய ஆந்திரா பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-07-20 18:45 GMT

திங்கள்சந்தை:

இரணியல் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பர்சை திருடிய ஆந்திரா பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மருத்துவமனைக்கு புறப்பட்டவர்

இரணியல் அருகே உள்ள கண்டன்விளையைச் சேர்ந்தவர் பிரபா. இவர் நேற்று காலையில் மருத்துவமனைக்கு செல்வதற்காக கண்டன்விளையில் இருந்து அரசு பஸ்சில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பிரபாவின் பின்னால் 30 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பிரபாவை மிகவும் நெருங்கி நின்றபடி பயணம் செய்தனர்.

அந்த பஸ் தோட்டியோடு பகுதியில் வந்த போது 2 பெண்களும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினர். பின்னர் பஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் பிரபா தான் பையில் வைத்திருந்த பர்சை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அந்த பஸ்சில் மருத்துவ செலவுக்காக ரூ.2 ஆயிரம் வைத்திருந்தார். இதனால் அவர் சத்தம் போட்டு அழுத நிலையில் நிலையில் டிரைவரிடம் பஸ்சை நிறுத்த கூறினார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பிரபா பஸ்சில் இருந்து இறங்கி தோட்டியோடு பஸ் நிறுத்தம் நோக்கி ஓடி வந்தார்.

துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்

அப்போது அங்கு ஒரு பெண் தலைமறைவான நிலையில் மற்றொரு பெண் திங்கள்சந்தை பஸ்சில் ஏறுவதை பார்த்தார். பிரபா அருகில் வருவதற்குள் அந்த பஸ் புறப்பட்டது. இதுகுறித்து அங்கு நின்ற போக்குவரத்து போலீசார் மற்றும் இளைஞர்களிடம் கூறினார். உடனே போலீசார் மற்றும் இளைஞர்கள் பஸ்சை மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று பரசேரியில் வைத்து மடக்கி நிறுத்தினர். தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை பிடித்தனர்.

இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி (வயது31) என்பது தெரிய வந்தது.

பெண் கைது

தொடர்ந்து அவரை பெண் போலீசார் மூலம் கைது செய்து இரணியல் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் அவரிடம் இருந்து பிரபாவின் பர்சை பணத்துடன் மீட்டு ஒப்படைத்தனர்.

இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மற்றொரு பெண் எங்கே? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்