ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-28 19:33 GMT

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகை பறிப்பு

லால்குடி பகுதியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு. இவரது மனைவி தங்கம் (வயது 62). சம்பவத்தன்று தம்பதி இருவரும் தென்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விட்டு, மீண்டும் ஊருக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.

தில்லைநகர் 7-வது குறுக்கு சாலையில் வரும் போது, தற்செயலாக பார்க்கும்போது, தங்கம் கழுத்தில் அணிந்து இருந்த 7¼ பவுன் நகையை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமி நைசாக பறித்து சென்று விட்டான். இது குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கஞ்சா விற்ற பெண் கைது

* திருச்சி எடமலைப் பட்டிபுதூர் மில்க் காலனி மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் கஞ்சா விற்றதாக திருச்சி ராம்ஜி நகர் மில் காலனியை சேர்ந்த சுமத்திரா (47) என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் மகள் மாயம்

*திருச்சி கிராப்பட்டி போலீஸ் குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுஜித்திரா (19). இவர் அந்த பகுதியில் உள்ள அழகு கலை நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும்அ வர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பா.ஜனதா பெண் பிரமுகர் மீது தாக்குதல்

*திருச்சி உறையூர் மேலகல்நாயக்கன் தெருவை சேர்ந்தவர் மனோகர். இவரது மனைவி தாரகேஸ்வரி (50). இவர் திருச்சி மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கும் அவரது கணவரின் உறவினர்களுக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தாரகேஸ்வரி தாக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பறித்தவர் கைது

* புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சூரியா (20). திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இவரிடம் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (52) என்பவர் செல்போனை பறித்துக்கொண்டு ஓடினார். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து கண்டோன்மெண்ட் போலீசில் ஒப்படைத்தனர். இதனையடுத்து போலீசார் முருகனை கைது செய்தனர்.

பணம் பறித்தவர் கைது

* திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (49). இவர் பொன்மலை கணேசபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது, கீழகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) என்பவர் ரூ.750 பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை கைது செய்தனர்.

லாட்டரி விற்றவர்கள் கைது

*மண்ணச்சநல்லூர், திருப்பைஞ்சீலி உள்ளிட்ட பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக திருப்பைஞ்சீலி அருகே உள்ள முருங்கப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (38), சுபாஷ் (25), மூவராயன்பாளையம் மேலூரை சேர்ந்த சண்முகம் (35), தியாகு பிரபாகரன் (32) ஆகியோரை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்தனர். .மேலும் அவர்களிடமிருந்து துண்டு சீட்டுகள் மற்றும் ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

*திருவெறும்பூர் பகுதியில் லாட்டரிசீட்டுகள் விற்றதாக காந்தி நகரை சேர்ந்த் மகேஷ் (34) என்பவரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு செல்போன், ரூ.1,100 பறிமுதல் செய்யப்பட்டது.

* திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் (20), மணிகண்டன் (27), கருப்பையா (37), பூபதி (35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்