விபத்தில் கையை இழந்த பெண் கடன் உதவி கோரி மனு

விபத்தில் கையை இழந்த பெண் கடன் உதவி கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார்.

Update: 2023-01-09 18:30 GMT

கையை இழந்த பெண்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பொன்னமராவதி தாலுகா மறவாமதுரை கிராமத்தை சேர்ந்த தேவராஜனின் மனைவி மஞ்சுளா. விபத்தில் வலது கையை இழந்த இவர் நேற்று தனது 2 மகன்களுடன் வந்து மனு அளித்தார்.

அவர் அளித்த மனுவில், ``எனக்கு கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கு லேணா விளக்கு சென்று வரும் போது நான் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் எனது வலது கை துண்டானது. எனக்கு முன்பு போல வேலை செய்யமுடியவில்லை. எனது கணவர், என்னையும், குழந்தைகளையும் கவனிப்பதில்லை. 6, 4-ம் வகுப்பு படிக்கும் எனது மகன்களுக்கு சரிவர ஜீவனம் பண்ண முடியவில்லை. என்னாலும் வருமானம் இல்லாமல் என் குழந்தைகளை கவனிக்க முடியவில்லை. எனவே என் நிலைமையை அறிந்து உதவியாகவோ அல்லது சிறு தொழில் செய்ய கடன் உதவி செய்ய வேண்டும்'' என கூறியிருந்தார்.

371 மனுக்கள்

இதேபோல இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த நபரை கைது செய்ய கோரி புதுக்கோட்டையை சேர்ந்த அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் சார்பில் மனு அளித்தனர். இலுப்பூர் அருகே எண்ணை கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் கணித பட்டதாரி ஆசிரியை லதாவை மணமேல்குடி மாணவியர் விடுதி காப்பாளினியாக மாறுதல் செய்ததை ரத்து செய்ய கோரி பள்ளி மேலாண்மை குழு மற்றும் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 371 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதாராமு உத்தரவிட்டார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்