பனமரத்துப்பட்டியில் தோழி வீட்டில் மது குடித்த பெண் மர்ம சாவு

பனமரத்துப்பட்டியில் தோழி வீட்டில் மது குடித்த பெண் திடீரென பலியானது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-03-09 22:18 GMT

பனமரத்துப்பட்டி:

மது குடித்த பெண்

சேலம் மாநகரம் கிச்சிப்பாளையம் களரம்பட்டியை சேர்ந்தவர் சுமதி (வயது 40). இவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கூலி வேலை செய்து வந்த சுமதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சுமதிக்கும், பனமரத்துப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நித்யா (29) என்பவருக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. இதனால் சுமதி, அடிக்கடி நித்யா வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமதி, நித்யா வீட்டுக்கு சென்றார். வீட்டில் நித்யா இல்லாததால், சுமதி அங்கு தங்கி உள்ளார். மேலும் அவர் 2 குவார்ட்டர் மதுபாட்டில்களை வாங்கி குடித்ததாக தெரிகிறது. நேற்று காலை அதிக நேரமாகியும், சுமதி எழவில்லை.

மர்ம சாவு

இதனால் சந்தேகம் அடைந்த நித்யாவின் பாட்டி சீரங்காயி, செல்போன் மூலம் அவருக்கு தகவல் தெரிவித்தார். நித்யா விரைந்து சென்று பார்த்தபோது, சுமதி இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் பனமரத்துப்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் சுமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சுமதி அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் பலியானாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தோழி வீட்டில் மது அருந்திய பெண் மர்மமாக இறந்த சம்பவம் பனமரத்துப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்