ஆண் நண்பர்களுடன் பழக்கம்: தட்டிக்கேட்ட மாமியாரை அடித்து கொன்ற மருமகள்...!
செஞ்சி அருகே ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் மாமியாரை அடித்துக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
செஞ்சி,
செஞ்சியை அடுத்த கம்பந்தூர் மதுரா பாண்டியன் குளம் கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவரது மனைவி சின்னபாப்பா(வயது 63). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
முனியன் இறந்து விட்டதால் சின்ன பாப்பா தனது 3-வது மகன் பாஸ்கருடன் வசித்து வந்தார். பாஸ்கருக்கு திருமணமாகி சங்கீதா(30) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பாஸ்கருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் இடது கால் எடுக்கப்பட்டது. இதனால் அவர் வேலைக்கு செல்லாததால் சங்கீதா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தார்.
அப்போது அவருக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் அவ்வப்போது செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார்.
அடித்துக்கொலை
இதைபார்த்த அவருடைய மாமியார் சின்னபாப்பா, சங்கீதாவை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் செல்போனிலும், நேரிலும் பேசி வந்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கீதா, மாமியார் சின்ன பாப்பாவை நெட்டி கீழே தள்ளி உள்ளார். பின்னர் அருகில் கிடந்த கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சின்னபாப்பா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மருமகள் கைது
இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா, போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சின்னபாப்பாவின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவை கைது செய்தனர். மாமியாரை மருமகளே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.