சென்னை வண்ணாரப்பேட்டையில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் கங்கையில் ஜலசமாதி அடைய முயன்ற பெண் நாக்பூரில் மீட்பு
மகன் இறந்த துக்கம் தாங்காமல் கங்கையில் ஜலசமாதி அடைய முயன்ற பெண்ணை, நாக்பூரில் ரெயில்வே போலீசார் மீட்டனர்.
மகன் சாவு
சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி.எம். கார்டனை சேர்ந்தவர் சதீஷ் (வயது 48). ஆஞ்சநேயர் கோவில் அர்ச்சகர். இவருடைய மனைவி வித்யா என்ற ஜெயஸ்ரீ (43). இவர்களுக்கு ஸ்ரீவர்ஷா (21) என்ற மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இவர்களுடைய மகன் ஸ்ரீவர்ஷா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 14-ந் தேதி இறந்துவிட்டார். மகன் மீது அதிகம் பாசம் வைத்திருந்த ஜெயஸ்ரீயால், இந்த இழப்பை தாங்க முடியவில்லை. மனவேதனையில் இருந்த அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர்.
உருக்கமான கடிதம்
இந்த நிலையில் ஜெயஸ்ரீ, கடந்த 19-ந் தேதி வீட்டில் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு கணவர் மற்றும் மகளுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். காலையில் எழுந்த அவருடைய கணவர், ஜெயஸ்ரீ இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் எங்கு தேடியும் அவரை காணவில்லை.
அப்போது அவர் எழுதி இருந்த கடிதம் அவர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் ஜெயஸ்ரீ, "எனது மகன் ஸ்ரீவர்ஷாவை பிரிந்து என்னால் வாழ முடியாது. அவன் போன இடத்துக்கே நானும் போக விரும்புகிறேன். மகள் அழ வேண்டாம். நீ தான் தந்தையை பார்த்து கொள்ள வேண்டும்" என உருக்கமாக எழுதி இருந்தார்.
கங்கையில் ஜலசமாதி
இதற்கிடையில் ஜெயஸ்ரீ, செல்போனில் தனது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு, தான் கங்கை நதிக்கு சென்று ஜலசமாதி அடையப்போவதாக தெரிவித்தார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், சதீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனால் அதிர்ந்துபோன சதீஷ், இது குறித்து தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார்.
அதில் ஜெயஸ்ரீ, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள தியாகராய கல்லூரி மெட்ரோ ரெயிலில் ஏறி சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறிச்செல்வது தெரிந்தது.
நாக்பூரில் மீட்பு
இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த ரெயில் நாக்பூரில் சென்று கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த ஜெயஸ்ரீயை டிக்கெட் பரிசோதர் உதவியுடன் ரெயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர்.
அவரிடம் போலீசார் விசாரித்தபோது, "இறைவன் நம்பிக்கையின்படி தற்கொலை செய்து கொண்டால் அடுத்த பிறவி கொடியதாக இருக்கும். எனவே புனித நதியான கங்கையில் ஜலசமாதி அடைந்து இந்த ஜென்ம பிறவியின் வாழ்வை முடித்து கொள்ள சென்றதாக" தெரிவித்துள்ளார்.
ஜெயஸ்ரீ மீட்கப்பட்டது குறித்து சென்னையில் உள்ள அவரது கணவர் சதீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் நிம்மதி அடைந்தார். நாக்பூரில் மீட்கப்பட்ட ஜெயஸ்ரீயை சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.