குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்

ஆக்கிரமிப்பில் இருந்து வீட்டை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-14 19:18 GMT

ஆக்கிரமிப்பில் இருந்து வீட்டை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த 3 பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கார் நிற்கும் இடத்தில் திடீரென தாங்கள் பையில் மறைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தங்களின் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனை பார்த்த கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அவர்கள் 3 பேரையும் மீட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தீக்குளிக்க முயன்றவர்கள் முசிறி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி பாப்பாத்தி (வயது 65), அவரது மகள் மாலதி (40), பேத்தி ஹரிப்பிரியா (12) என்பது தெரியவந்தது.

விசாரணை

மேலும் அவர்கள் கூறுகையில், எங்களுக்கு சொந்தமான வீட்டை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலகங்களில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த நாங்கள் இன்று (அதாவது நேற்று) கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து வந்து தற்கொலைக்கு முயன்றோம் என்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி அவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்