போலீஸ் நிலையம் முன்பு சாலையில் படுத்த பெண்ணால் பரபரப்பு
போலீஸ் நிலையம் முன்பு சாலையில் படுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னிமலை போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் பணியில் இருந்தனர். அப்போது தனது மகனுடன் சுமார் 40 வயதுடைய ஒரு பெண் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அந்தப் பெண் போலீசாரிடம் ஆவேசமாக, 'தன்னை சிலர் தாக்கி விட்டனர். எனவே அவர்களை பிடிக்க வர வேண்டும்' என்றார். இதனை கேட்ட போலீசார் அவரிடம், எந்தவித பதற்றமும் படாமல் நடந்தவற்றை புகாராக எழுதி கொடுங்கள். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். ஆனால் அந்த பெண் அதை கேட்காமல் திடீரென போலீஸ் நிலையம் முன்பு சாலையின் நடுவில் படுத்து கொண்டார். இதனை கண்ட போலீசார் அதிா்ச்சி அடைந்தனர். உடனே அந்த பெண்ணிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார்கள். மேலும் அவருடன் வந்த அவரது மகனும் அந்த பெண்ணை எழுந்திருக்க சொன்னார். பின்னர் அந்த பெண் எழுந்து போலீசாரிடம், ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு தன்னுடைய மகனை அழைத்து கொண்டு ஸ்கூட்டரில் அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். ஆனால் அவர் போலீசில் எந்த புகாரும் அளிக்கவில்லை. இந்த சம்பவத்தால் சென்னிமலை போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.