தீயில் கருகி பெண் உயிரிழந்த சம்பவம்:கணவரின் தம்பியை கைது செய்ய கோரி குடும்பத்தினர் சாலை மறியல்பாலியல் தொல்லை அளித்ததாக போலீசில் புகார்

விக்கிரவாண்டி அருகே தீயில் கருகி பெண் உயிரிழந்த சம்பவத்தில் கணவரின் தம்பியை கைது செய்ய கோரி, குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர் பாலியல் தொல்லை அளித்ததாக போலீசில் அவர்கள் கூறினர்.

Update: 2023-08-06 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி தாலுகா நாரங்கசிங்கனூரை சேர்ந்தவர் வினோத்(வயது 30). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (26). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். கடந்த 4-ந்தேதி மாலை, லட்சுமி கியாஸ் அடுப்பில் சமையல் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பற்றி, உடல் முழுவதும் பரவி எரிந்து தீக்காயமடைந்தார். இதையடுத்து, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை வினோத் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வந்த லட்சுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கதறி அழுதனர்.

சாலை மறியல்

இதற்கிடையே இரவு 8 மணியளவில் லட்சுமியின் உறவினர்கள் நாரசிங்கனூரில் விழுப்புரம்-செஞ்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கஞ்சனூர் போலீசார் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், லட்சுமி இறப்புக்கு அவரது கணவரின் தம்பி தான் காரணம். சென்னையில் சினிமா படக்குழுவில் வேலை பார்த்து வரும் அவர் தனது அண்ணன் மனைவியான லட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனால் தான் லட்சுமி தீக்குளித்து இறந்தார். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளியை கைது செய்திட வேண்டும் என்று தெரிவித்தனர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை அடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியதுடன், ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்