ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண் சிக்கினார்; 10 பவுன் மீட்பு

கடையநல்லூரில் ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண் சிக்கினார்.

Update: 2023-09-10 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூரில் ஓடும் பஸ்சில் நகை பறித்த பெண் சிக்கினார்.

சங்கிலி பறிப்பு

கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி திரிகூடபுரம் சேர்மன் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து மனைவி சண்முகத்தாய் (வயது 58). இவர் கடந்த 3-ந்தேதி தன்னுடைய உறவினர் வீடான அச்சன்புதூருக்கு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி பஸ்நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறிச் சென்றபோது அவரது கழுத்தில் கிடந்த 48 கிராம் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் யாரோ பறித்துச் சென்றனர்.

இதுபோன்று கடந்த மாதம் 28-ந் தேதி கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பெரிய தெரு சேர்த்தியன் மனைவி ஜோதிபாலா (26) என்பவர் தனது மகள் மான்சிக்கு உடல்நிலை சரியில்லாததால் கடையநல்லூர் ஆஸ்பத்திரி பஸ்நிறுத்தத்தில் இருந்து தென்காசி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது மகள் கழுத்தில் கிடந்த 24 கிராம் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றது தெரியவந்தது.

போலீசில் புகார்

இவ்விரு சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து பஸ்நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது கடையநல்லூர் ஆஸ்பத்திரி பஸ்நிறுத்தத்தில் பர்தா அணிந்த 2 பெண்கள் சிறுமி மான்சி கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற காட்சி தெரியவந்தது.

பெண் கைது

இதனை தொடர்ந்து தனிப்படையினர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கடையநல்லூர் புதிய பஸ்நிலையத்தில் நின்ற அந்த பெண்ணை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு பகுதி ராஜகோபால் நகரை சேர்ந்த திருப்பதி என்பவரின் மனைவி அய்யம்மாள் (35) என்பது தெரிய வந்தது.

அதில், தமிழகத்தில் உள்ள எந்தெந்த கோவில்களில் எந்த தேதியில் திருவிழா வருகிறது என்பதை முன்கூட்டியே அறிந்து அந்த பகுதிகளுக்கு சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தரை போல் வேஷமிட்டு நகை, பணத்தை பறித்து செல்வதும், பஸ்நிலையம், கூட்ட நெரிசல் போன்ற இடங்களில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.

அய்யம்மாளிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்கச் சங்கிலிகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்