கூர்மையான ஆயுதம் கிழித்ததில் பெண், சிறுமி படுகாயம்
தக்கலை பஸ் நிலையத்தில் கூட்டமாக பஸ்சில் ஏறிய போது கூர்மையான ஆயுதம் கிழித்ததில் பெண், சிறுமி காயமடைந்தனர். பிக் பாக்கெட் திருடர்கள் அட்டூழியமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை:
தக்கலை பஸ் நிலையத்தில் கூட்டமாக பஸ்சில் ஏறிய போது கூர்மையான ஆயுதம் கிழித்ததில் பெண், சிறுமி காயமடைந்தனர். பிக் பாக்கெட் திருடர்கள் அட்டூழியமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலுக்கு சென்றனர்
திருவனந்தபுரம் அருகே உள்ள ஆலியாடி பகுதியை சேர்ந்தவர்கள் ஷைஜா ராணி (வயது 42), பத்மலதா (55), இவரது பேத்தி ஆதிரா (8), சாந்தா (65), பிரியா (44). இவர்கள் 5 பேரும் நேற்று காலையில் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பொங்கலிட்டு வழிபாடு செய்வதற்காக பொங்கல் பொருட்களுடன் புறப்பட்டனர். இதற்காக தக்கலை பஸ் நிலையம் வந்து அங்கிருந்து கோவிலுக்கு செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மண்டைக்காடு செல்லும் ஒரு அரசு பஸ் வந்தது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த ஏராளமான பயணிகள் அந்த பஸ்சில் ஏறுவதற்காக ஓடி சென்றனர். அவர்களுடன் ஷஜா ராணி உள்ளிட்ட கேரள பயணிகளும் பஸ்சில் ஏற முயன்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அனைவரும் முண்டியடித்து கொண்டு ஒருவரை ஒருவர் நெருக்கியபடி படிக்கட்டில் ஏறினர்.
கையில் காயம்
அப்போது ஏதோ ஒரு கூர்மையான ஆயுதம் ஷைஜா ராணியின் வலது கையை கிழித்தது. இதில் ஆழமான ரத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இது போல் சிறுமி ஆதிராவின் தோள் பட்டையிலும் காயம் ஏற்பட் டது. மேலும் இன்னொரு பயணிக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதை கண்ட மற்ற பயணிகள், ''நகை திருடர்கள் பிளேடால் அறுத்து விட்டனர்'' என்று சத்தம் போட்டனர். இதனால் டிரைவர் பஸ்ைச பயணிகளோடு தக்கலை போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி சென்றார். அங்கு போலீசார் பஸ்சில் இருந்த பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.
அப்போது ஒரு வயதான நபர் வைத்திருந்த ைபயில் புல் அறுக்க பயன்படுத்தும் அரிவாள் இருந்தது. அதில் புல் அறுக்கும்போது உள்ள மண்தடம் மட்டுமே இருந்தது. ரத்தக்கறை எதுவும் இல்லை. இதனால் இந்த அரிவாள் மூலம் காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை என கருதப்பட்டது.
தப்பி சென்றாரா?
இதுபோல் மற்ற பயணிகளிடம் சோதனையிடப்பட்டது. ஆனால் கூர்மையான ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து பஸ்சை போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் காயமடைந்த ஷைஜா ராணிக்கும், சிறுமி ஆதிராவுக்கும் தக்கலை அரசு ஆஸ்பத்தியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ஆட்டோ மூலம் மண்டைக்காடு கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
ஏதோ ஒரு பயணி பையில் வைத்திருந்த கத்தி போன்ற கூர்மையான மர்ம பொருள் கேரள பயணிகளை கிழித்திருக்கலாம் என்றும், இந்த சம்பவம் நடந்தவுடன் அந்த நபர் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி சென்றிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். மேலும் இது குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் தக்கலை பஸ் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.