வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

பந்தலூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-10 13:49 GMT

பந்தலூர், 

பந்தலூர் தாலுகாவில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அங்கு வாழை, தென்னை, பாக்கு மரங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாதிரிமூலா அத்திசால், கோட்டப்பாடி பகுதிகளில் 4 காட்டு யானைகள் நுழைந்தன. தொடர்ந்து அங்குள்ள குடியிருப்புகளை முற்றுகையிட்டது. அய்யன்கொல்லியில் இருந்து கோட்டப்பாடி செல்லும் சாலையை யானைகள் வழிமறித்தன. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர். தகவல் அறிந்த சேரம்பாடி வனகாப்பாளர் கிருபானந்தகுமார், பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் காலையில் தான் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது.

இதையடுத்து மாலையில் மீண்டும் ஒற்றை காட்டு யானை அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறித்தது. இதனால் வேலைக்கு சென்று வந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் அச்சமடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சேரம்பாடி உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி உத்தரவின்படி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் கொட்டுராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் யானையை விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்