கூடலூர் பாண்டியாறு அரசு தேயிலை தோட்டத்தில் குட்டியை ஈன்ற காட்டு யானை- தோட்டத்தொழிலாளர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

கூடலூர் பாண்டியாறு அரசு தேயிலை தோட்டத்தில் அழகான குட்டியை காட்டு யானை ஈன்றது. தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Update: 2022-07-09 12:46 GMT

கூடலூர்

கூடலூர் பாண்டியாறு அரசு தேயிலை தோட்டத்தில் அழகான குட்டியை காட்டு யானை ஈன்றது. தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

குட்டியை ஈன்ற காட்டு யானை

கூடலூர், தேவாலா பகுதியில் காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. தொடர்ந்து தேயிலைத் தோட்டங்களுக்குள் முகாமிட்டு வருகிறது. இந்த நிலையில் கூடலூர் இரும்பு பாலம் அருகே பாண்டியாறு அரசு தேயிலைத்தோட்டத்தில் நள்ளிரவு காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டது.

இதனால் தோட்ட தொழிலாளர் குடும்பத்தினர் பீதி அடைந்தனர். தொடர்ந்து விடியற்காலை வரை காட்டு யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலையில் தேயிலைத் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது காட்டு யானைகள் கூட்டத்துக்குள் பிறந்து சில மணி நேரம் மட்டுமே ஆன குட்டி யானை நின்றிருந்தது. சிறிது நேரத்தில் சில யானைகள் அங்கிருந்து சென்றது.

வனத்துறை எச்சரிக்கை

தொடர்ந்து குட்டியை ஈன்ற தாய் யானை அப்பகுதியில் முகாமிட்டது. தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் தனது கால்களுக்கு இடையே குட்டியை தாய் யானை நிறுத்தி வைத்திருந்தது. இதனிடையே காட்டு யானை குட்டியை ஈன்ற தகவல் பரவியது. இதை தொடர்ந்து ஏராளமானவர்கள் குட்டியை காண ஆவலுடன் வந்து கண்டு ரசித்தனர்.

தகவல் அறிந்த நாடுகாணி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்து பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பின்னர் கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தினர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, காட்டு யானை தனது குட்டியை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லும் வரை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்லக்கூடாது. இவ்வாறு அவர்கள் எச்சரித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்