அரசு தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானை
அரசு தேயிலை தோட்டத்திற்குள் குட்டியுடன் புகுந்த காட்டு யானை செய்தது.
பந்தலூர்
பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு தேயிலைதோட்டம் ரேஞ்ச் எண் 1, 2, பத்துலைன்ஸ், பாலவாடிலைன்ஸ், காளிகோவில்லைன்ஸ், காவயல் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வெளியேறி, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொளப்பள்ளி அரசு தேயிலைதோட்டத்தில் நேற்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். மாலை 5 மணியளவில் காட்டு யானை குட்டியுடன் புகுந்தது. இதனைக்கண்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த யானை தேயிலை தோட்ட சாலையில் குட்டியுடன் உலா வந்தது. இதையடுத்து தொழிலாளர்கள் கூச்சலிட்டு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதேபோல் மழவன்சேரம்பாடி, கோட்டபாடி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.