வீடுகளை முற்றுகையிட்ட காட்டு யானை
கூடலூரில் காட்டு யானை வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் இரவில் தனியாக நடந்து செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூரில் காட்டு யானை வீடுகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் இரவில் தனியாக நடந்து செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
வீடுகளை முற்றுகையிட்டது
கூடலூர், ஓவேலி, நாடுகாணி பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாலை, இரவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்த காட்டு யானைகள், சில சமயங்களில் கூடலூர் நகருக்குள் புகுந்து விடுகின்றன.
நேற்று முன்தினம் இரவு கூடலூர் கோத்தர் வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. தொடர்ந்து வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் எந்த நேரத்திலும் வீடுகள் மற்றும் உடைமைகளை காட்டு யானை தாக்கும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தவித்தனர். இந்த சமயத்தில் லேசாக சாரல் மழையும் பெய்தது. தொடர்ந்து அப்பகுதியில் பயிரிட்டு இருந்த வாழை, பாக்கு மற்றும் பயிர்களை தின்று சேதப்படுத்தியது.
தனியாக செல்ல வேண்டாம்
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அத்திப்பாளி, காளம்புழா, 1-ம் மைல் வழியாக புஷ்பகிரிக்கு காட்டு யானை வந்தது. இதனால் காலை நேரத்தில் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். சமீப காலமாக நகராட்சி பகுதியில் காட்டு யானை வீடுகளை முற்றுகையிடுவது, சாலையில் உலா வருதல் காரணமாக அனைத்து தரப்பினரும் அவசர பணிகளுக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதன் காரணமாக காட்டு யானை கூடலூருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. இதனிடையே இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம். தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களை எச்சரித்து உள்ளனர்.