பிளாஸ்டிக் கழிவுகளை தின்ற காட்டு யானை

முதுமலை புலிகள் காப்பகம் அருகே சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை காட்டு யானை தின்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Update: 2022-09-18 18:45 GMT

கூடலூர், 

முதுமலை புலிகள் காப்பகம் அருகே சாலையோரம் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை காட்டு யானை தின்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிளாஸ்டிக் பை

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதி மற்றும் பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள் அதிகம் உள்ளது. இதனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிமாநில சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து மசினகுடி வழியாக ஊட்டிக்கு செல்லும் நெடுஞ்சாலையோரம் காட்டு யானை ஒன்று பசுந்தீவனங்களை தின்று கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் கிடந்த கழிவுகளுடன் கூடிய பிளாஸ்டிக் பையை தும்பிக்கையால் எடுத்து, அதிலிருந்த தூசியை போக்கும் வகையில் தனது கால்களில் தட்டியது. பின்னர் பிளாஸ்டிக் பையை பலமுறை மடக்கி திடீரென வாயில் வைத்து தின்றது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இயற்கை சூழல் பாதிப்பு

இந்த காட்சி வன ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டு உள்ள நிலையில், காட்டு யானை எளிதாக சாப்பிடும் வகையில் பிளாஸ்டிக் பையை யாரோ வனப்பகுதியில் வீசி சென்று உள்ளனர். இதனால் வரும் நாட்களில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் கள்ள சந்தையில் விற்கப்படுகிறது. இதன் காரணமாக பொது இடங்களில் பிளாஸ்டிக் பைகள் புழக்கம் அதிகரித்து உள்ளது. தொடர் நடவடிக்கை மேற்கொண்டு கட்டுப்படுத்தாவிட்டால், வனவிலங்குகள் மட்டுமின்றி நீலகிரியின் இயற்கை சூழலும் பாதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்