முன்னாள் காதலியிடம் இருந்து பெயிண்டரை மீட்க பாசப் போராட்டம் நடத்திய மனைவி-மகள்
முன்னாள் காதலியிடம் இருந்து பெயிண்டரை மீட்க பாச போராட்டம் நடத்திய மனைவி-மகளால் தக்கலை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தக்கலை:
முன்னாள் காதலியிடம் இருந்து பெயிண்டரை மீட்க பாச போராட்டம் நடத்திய மனைவி-மகளால் தக்கலை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னாள் காதலி
திங்கள்நகர் அருகே உள்ள பாளையம் பகுதியை சேர்ந்த பெயிண்டருக்கும், இளம் பெண்ணுக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை அமைதியாக சென்று கொண்டு இருந்தது.
திருமணத்திற்கு முன்பு பெயிண்டர் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். அந்த பெண் ஒரு கட்டத்தில் பெயிண்டரை பிரிந்து சென்று குலசேகரம் பகுதியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு கணவன், மகன், மகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பெயிண்டர் தன்னுடைய முன்னாள் காதலியை சந்தித்தார். அதன்பிறகு அவர்கள் இருவரும் காதலை மீண்டும் வளர்த்து வந்தனர். இது பெண்ணின் கணவருக்கு தெரிய வந்ததும் அவர் மனைவியை கண்டித்தார். அதைத்தொடர்ந்து அந்த பெண் 6 மாதங்களுக்கு முன் குழந்தைளுடன் திருவிதாங்கோட்டில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து விட்டார்.
வாழ விருப்பம் இல்லை
இதுபற்றி குலசேகரம் போலீசில் கணவர் புகார் செய்தார். அதன்பேரில் கணவன்-மனைவி இருவரையும் போலீசார் அழைத்து பேசினர். அப்போது கணவரோடு வாழ விருப்பம் இல்லை என்றும், அம்மா வீட்டிற்கு செல்வதாகவும் எழுதி கொடுத்துவிட்டு பெண் சென்று விட்டார்.
தன் மனைவியின் இந்த முடிவுக்கு பெயிண்டர் தான் காரணம் என்பதை உணர்ந்த கணவர், பாளையத்துக்கு சென்று பெயிண்டரின் மனைவியிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார், இதனால் பெயிண்டர் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
பாசப்போராட்டம்
இந்த நிலையில் நேற்று காலை குலசேகரத்திற்கு காதலனோடு மோட்டார் சைக்கிளில் பெண் வந்து ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதை அறிந்த கணவர் அங்கு வந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்துள்ளார், இதனால் அங்கு பிரச்சினை ஏற்பட்டது.
இது பெயிண்டர் மனைவிக்கு தெரிய வந்தது. அவர் தக்கலை போலீசில் தனது 10 வயது மகளோடு வந்து என் கணவரை முன்னாள் காதலிடமிருந்து மீட்டு தரவேண்டும் என்று புகார் கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து விசாரணைக்காக பெயிண்டர், அவரின் முன்னாள் காதலி ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர் அப்போது போலீஸ் நிலைய வளாகத்தில் ஒரு பாச போராட்டமே நடந்தது, முன்னாள் காதலியிடமிருந்து பெயிண்டரை மீட்பதற்காக அவரின் மனைவி கண்ணீர் விட்டு அழுதார். மகள், 'அப்பா நீங்க தப்பு செய்றீங்க' என தந்தையை பார்த்து கேள்வி கேட்டு அழுதது காண்போரையும் கண்கலங்க வைத்தது.
அதைத்தொடர்ந்து இருதரப்பினரையும் போலீசார் அழைத்து பேசியபோது மனைவி-மகளுடன் செல்கிறேன் என்று பெயிண்டர் கூறினார். அதைத்தொடர்ந்து எழுதி வாங்கிகொண்டு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர், இதை கண்டு கோபமான முன்னாள் காதலி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
===========