தேசிய கண்தான இரு வார விழா
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய கண்தான இரு வார விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேசிய கண்தான இரு வார விழா நடைபெற்றது. இதற்கு கல்லுாரி முதல்வர் உஷா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கண்தான விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து கண் மருத்துவத்துறை தலைவர் டாக்டர் நேரு பேசும்போது, தற்போது நாடு முழுவதும் வருடத்திற்கு 27 ஆயிரம் கண்களை தானமாக பெற்று வருகிறோம். ஆனால் ஆண்டிற்கு கருவிழியால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்களுக்காக காத்திருக்கிறார்கள். இதை ஈடு செய்ய பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும். சிறுவர் முதல் பெரியவர் வரை இறந்த பின்பு அனைவரும் கண்தானம் செய்யலாம். கண் கண்ணாடி அணிந்தவர்கள் சர்க்கரை, ரத்த கொதிப்பால் பாதிப்படைந்தவர்கள், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களும் கண்தானம் செய்யலாம் என்றார்.
மேலும் கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை, ரங்கோலி, ஓவியம், பேச்சு ஆகிய போட்டிகள் மற்றும் நாடகம் நடைபெற்றது. இதில் டாக்டர்கள் கணேஷ்ராஜா, பொற்செல்வி, சரண்யா, செவிலியர் கண்காணிப்பாளர் வண்ணமுகில், செவிலியர்கள் சத்தியலட்சுமி, ஷாமிளா, பேராசிரியர் தீபா மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.