சாலையில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி

ஆண்டிப்பட்டி அருகே சாலையில் நிலக்கரி ஏற்றி வந்த லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-09 19:45 GMT

தலைகுப்புற கவிழ்ந்த லாரி

தூத்துக்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவு நிலக்கரி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தேனியை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 5 மணியளவில் தேனி-ஆண்டிப்பட்டி சாலையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள சண்முகசுந்தரபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் இருந்த தடுப்பு சுவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

போக்குவரத்து பாதிப்பு

லாரி முற்றிலும் உருக்குலைந்து சேதம் அடைந்தது. மேலும் லாரியில் ஏற்றப்பட்டிருந்த நிலக்கரி முழுவதும் சாலையில் கொட்டியது. இதனால் சாலையின் ஒரு பகுதியில் நிலக்கரி குவியலாக காட்சி அளித்தது. விபத்து காரணமாக தேனி-ஆண்டிப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

இந்த விபத்து காரணமாக இருவழி சாலையின் ஒரு வழி அடைக்கப்பட்டு, மற்றொரு வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. சாலையில் கவிழ்ந்த லாரியை கிரேன்மூலம் அப்புறப்படுத்தும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் சாலையில் கவிழ்ந்த லாரி அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்