கூடலூர்- கேரளா சாலையில் மரம் விழுந்தது -போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்- கேரளா சாலையில் மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
கூடலூர்
கூடலூர்- கேரளா சாலையில் மரம் விழுந்து ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரம் விழுந்து
கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை முறையாக பெய்யவில்லை. மேலும் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக கூடலூர், பந்தலூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் தொடர் மழை பெய்தது. இதேபோல் கடும் குளிரும் நிலவியது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்துக்கு செல்லும் சாலையில் உள்ள கீழ்நாடுகாணி பகுதியில் மாலை 6 மணிக்கு சாலையோரம் நின்றிருந்த மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்து கொண்டிருந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து கூடலூர் நிலைய அலுவலர் மார்ட்டின் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மழையை பொருட்படுத்தாது சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் இரவு 7 மணிக்கு மரம் அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. இந்த சம்பவத்தால் வெளியூர் செல்லும் வாகனங்கள் மிக தாமதமாக புறப்பட்டு சென்றது. இதேபோல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.