2-வது வாரமாக தக்காளியை ரூ.60-க்கு விற்ற வியாபாரி

திண்டுக்கல் காந்திமார்க்கெட்டில் 2-வது வாரமாக தக்காளியை ரூ.60-க்கு வியாபாரி ஒருவர் விற்பனை செய்தார். நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

Update: 2023-08-05 16:06 GMT

நாட்டையே திரும்பி பார்க்க வைத்த தக்காளி விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் தக்காளி வியாபாரி சந்தோஷ்முத்து என்பவர், கடந்த வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் பொதுமக்களின் நலன்கருதி ஒருநாள் மட்டும் தனது கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையறிந்த பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு படையெடுத்து வந்து சந்தோஷ் முத்துவின் கடையில் தக்காளியை போட்டி, போட்டு வாங்கிச்சென்றனர். அன்றைய தினம் மட்டும் 5½ டன் தக்காளி விற்பனை ஆனது. அதன் பின்னர் வழக்கம் போல் ஒரு கிலோ தக்காளியை ரூ.100 முதல் ரூ.120 வரை வாங்கிச்செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

இதற்கிடையே வியாபாரி சந்தோஷ்முத்து நேற்று மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் 2-வது வாரமாக தனது கடையில் இன்று (அதாவது நேற்று) ஒருநாள் மட்டும் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அவருடைய கடைக்கு திரண்டு வந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தக்காளியை வாங்கிச்சென்றனர். நேற்று 8 டன் வரை தக்காளி விற்பனை ஆனது.

Tags:    

மேலும் செய்திகள்