குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து
துடியலூர் அருகே குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
துடியலூர்
துடியலூரை அடுத்துள்ள அசோகபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள ரெயில்வே பாலம் அருகே கொட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகளுக்கு அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் ஏற்படும் புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குப்பைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டனர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கோவை வடக்கு தீயணைப்பு படையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.