பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பயங்கர தீ விபத்து

சென்னை மயிலாப்பூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. லாக்கரில் இருந்த பணப்பெட்டகம் தப்பியது.

Update: 2023-01-03 22:03 GMT

சென்னை,

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் உள்ள கச்சேரி சாலையில் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. 2 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், தரைத்தளத்தில் வங்கியும், மற்ற 2 தளங்களில் குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் மின்கசிவு காரணமாக திடீரென வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த காவலாளிகள் வங்கியிலுள்ள அபாய மணியை அழுத்தினார்கள். அபாய மணியின் ஓசை கேட்டு அந்த பகுதியில் இருந்த மக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ஏசி, கம்ப்யூட்டர் எரிந்து நாசம்

இதனையடுத்து உடனடியாக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலாப்பூர், திருவல்லிக்கேணி மற்றும் அசோக் நகரை சேர்ந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் வங்கியிலுள்ள கதவுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும், பைப் மூலம் தண்ணீர் பீய்ச்சியும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஏ.சி, மரச்சாமான்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் முக்கிய ஆவணங்களும் தீக்கிரையாகின.

மின்கசிவு காரணமா?

தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாரின் துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. லாக்கரில் இருந்த பணப்பெட்டகம் தப்பியது. மேலும் விபத்து நடந்தது அதிகாலை நேரம் என்பதால் ஊழியர்கள் யாரும் வங்கியில் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்