உடல் கருகி உயிருக்கு போராடிய வாலிபர்
உடல் கருகி, உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்ட வாலிபரால் கொடைக்கானலில் பரபரப்பு ஏற்பட்டது.
உடல் கருகிய வாலிபர்
கொடைக்கானல் அப்சர்வேட்டரி அருகே, முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையில் இருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் வாலிபர் ஒருவர், உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைக்கண்டு அந்த வழியாக வாகனங்களில் சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள், கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு, பாதி உடல் எரிந்த நிலையில் வாலிபர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அவரை மீட்டு, சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மோட்டார் சைக்கிள்
கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனக்கு தானே உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அந்த வாலிபர் போலீசாரிடம் தெரிவித்தார்.
அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த இடத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றது. அதனை போலீசார் கைப்பற்றினர். அது, சென்னை பதிவு எண் கொண்டது ஆகும். அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தனர். அதற்குள் செல்போன், ஆதார் கார்டு, பட்டப்படிப்பு சான்றிதழ் ஆகியவை இருந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர்.
காரணம் என்ன?
ஆதார் கார்டை அடிப்படையாக கொண்டு அந்த வாலிபரின் பெயர், முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வாலிபர், சென்னையை அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரர் (வயது 22) என்று தெரியவந்தது. மோட்டார் சைக்கிளின் ஆர்.சி.புத்தகமும் அதே முகவரியில் தான் உள்ளது.
இதுதொடர்பாக ஜெகதீஸ்வரரின் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தேனிக்கு விரைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தினால் தான், ஜெகதீஸ்வரர் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
-----