பழுதான மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபரால் பரபரப்பு

சிதம்பரம் அருகே நடுரோட்டில் பழுதான மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரித்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-18 19:11 GMT

காட்டுமன்னார்கோவில், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமராட்சி அருகே உள்ள சர்வராஜன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 30). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் குமராட்சி நோக்கி புறப்பட்டார். சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் வீரநத்தம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிள் திடீரென பழுதாகி நின்றது. இதையடுத்து அவர், மோட்டார் சைக்கிளை இயக்க கிக்கரை உதைத்தார். ஆனால் மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆக வில்லை. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் டேங்கில் இருந்த பெட்ரோலை எடுத்து மோட்டார் சைக்கிள் மீது ஊற்றி தீவைத்து எரித்தார். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து எலும்பு கூடாக காட்சியளித்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி குமராட்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்தினர். மேலும் மணிகண்டன் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை எரித்தாரா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பழுதான மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி வாலிபர் எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்