உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது
உளுந்தூர் பேட்டையில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருந்த நிலையில் வாகனம் மோதி 2 மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
உளுந்தூர்பேட்டை
மாணவன்
உளுந்தூர்பேட்டை கார்னேஷன் தெருவை சேர்ந்தவர் பன்னீர் மகன் விஷ்வா(வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று விஷ்வா அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்(18), மணிமாறன்(17) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை-திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
2 பேர் பலி
இதில் படுகாயம் அடைந்த விஷ்வா மற்றும் நித்திஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த மணிமாறன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மணிமாறனை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பெற்றோர் கதறல்
பின்னர் பலியாகி கிடந்த விஷ்வா, நித்திஷ் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்து இருவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து அவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து எவ்வாறு நடந்தது? 3 பேர் மீது மோதிவிட்டு நிற்காமல்சென்ற வாகனம் எது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை கொண்டாட இருந்த நிலையில் விபத்தில் மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவத்தால் கார்னேஷன் தெரு பகுதியே சோகத்தில் மூழ்கி இருக்கிறது.